Tuesday, September 23, 2008

மாறிவரும் உலகில்

மாறி வரும் உலகம்...

முதலில் கண் விழித்து பார்த்த முகம் எது?
முதன்முதலாய் யார் மடியில் அசுத்தம் செய்தேன்

அன்று தான் பிறந்ததால்
இதுவரை தெரியாது.

யானை பொம்மை இருந்தாதா இல்லை
குதிரையா.. வேறு ஏதாவது?
அம்மா வாங்கி தந்ததா இல்லை
அப்பாவா...
வயதே தெரியாத காலம்
உறுதியாக சொல்ல தெரியவில்லை.

முதல் காதல் எது?
கைபிடித்து எழுத்து கற்பித்த‌
ஆசிரியையா...
பள்ளிக்கூட மிதிவண்டி தோழி
ராணியா... இல்லை திருமணம் முடிந்து
கணவனோடு செல்லும் போது
என்னைப் பார்த்து கண்ணீர் சிந்திய‌
உறவுப் பெண் புவனா அக்காவா...

பிரித்து அறிய வயதிற்கு தெரியும் என்றாலும்
இதுவரை அறிவிற்கு தெரியவில்லை...

மாறிவரும் உலகம்
எண்ணங்கள் எல்லாம் தொலைந்துவிட்டன...

இசைதட்டு தாலாட்டுக்கு தூக்கம்
அம்மா பாடுவாளா, தெரியாது...
எல்லா உறவாகவும்
ஒரே செவிலி தாய்..

தொலைப்பேசி முத்த சத்தம்
அமெரிக்க பேரனுக்கு பாட்டி
முகம் தெரியாது...
உறவுகள் எல்லாம் ஒலியாய் மட்டுமே
வாழ்வது வேதனை தான்...

கணிப்பொறி விளையாட்டு
அண்டை வீட்டான் பெயர் கூட தெரியாமல்
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு..
இணையத்தில் மட்டுமே
நட்பும் காதலும்...

மாறிவரும் உலகில் நான்
எண்ணங்களை மட்டுமே தொலைத்தேன்..
ஆனால் என்னென்ன தொலைத்திருக்கிறான்
என் பிள்ளை...
நான் பாவமா, இல்லை அவனா....
கேள்வி மட்டுமே இப்போது எழிதாக இருக்கிறது
பதில் சொல்ல வயதிற்கும் தெரியாது..
வாழ்க்கைக்கும் தெரியாது....