Tuesday, April 14, 2009

நான் கடவுள்....

சுயத்தை விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு விளக்கும் கட்டாயம் இன்று கொண்டேன். பலர் கூறிச்சென்றது போலவே நானும் வாழ்க்கை கடல் என்றும் நீங்கள் எல்லோரும் பயணிகள் என்று தான் கூறப்போகிறேன், என் வேலை அதில் என்ன என்று விளக்கி.

நீங்கள் எல்லோரும் தனித் தனியே பயணிக்கவே இயலும்; அதனால் தான் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சக்தியாய் நிறைந்தேன். வாழ்வை பாதுகாப்புடன் கடக்கும் ஒரு ஓடமாய் இருக்கிறேன் உங்கள் எல்லோருக்கும்.

நான் ஒரு ஓடம் மட்டுமே. செலுத்துபவர்கள் நீங்களே. பாதையை தேர்வு செய்வதும் நீங்களே. செல்லும் வழிகள் இடர்கள் வரும் போது நீங்கள் மூழ்கிடாமல் மட்டுமே உங்களை நான் காக்கிறேன். என் துணையோடு தான் செல்கிறோம் என்று மனதில் துணிவோடு நேர் வழி செல்பவன் வாழ்வைக் கடக்கிறான். நானும் அவனுக்கு துணை போகிறேன் என்று தவறாக நினைத்து கூடாத பாதைகளைத் தேர்வு செய்தவன் வழி தவறி எங்காவது மாட்டிக் கொள்வான். அப்போதும் கூட கவிழ்ந்த ஓடமாகவாவது நான் அவனை காப்பாற்ற துணை இருப்பேன். அந்த நிலையிலும் திறமையும் தன் தவறை புரிந்தவனும் சிரமங்களில் இருந்து விடை பெறுகிறான். அதனால் நான் நல்லவன் தீயவன் என்று வேற்றுமை பாராத ஒரு நண்பன் மட்டுமே.

ஓடமாக மட்டுமே நான் இருக்கிறேன்; ஓடத்தை செலுத்தும் சக்தியையும் உன் மனதில் வலிமையையும் நான் உனக்கு பரிசுகளாய் தருகிறேன். அவற்றை ஒழுங்கு படுத்தி பயன்படுத்தக் கற்றவன் வெல்கிறான்; கடலைக் கடந்த பின்னும் புகழோடு வாழ்கிறான். இனியும் உனக்கு விளக்கம் போதவில்லை என்றால் அது என் தவறு தான்; நான் தான் உனக்கு கேள்விகள் அதிகம் கேட்கும் பரிசை தந்துவிட்டேன் போலும்....