Wednesday, November 10, 2010

இரு ஜனனம்.....

புதிதாய் ஒரு பயணம்...
சில நாட்கள் மட்டுமே அறிமுகம்
காலையில் திருமண சடங்கு
இரவே உயிர் வாங்கும் வன்முறை

எல்லோரும் இளைப்பாறும் சுமைதாங்கியாய்
மட்டுமே பெண்கள்
பாரம் குறையும் வரை ஆராதனை.

ஓரிரு மாதங்களில் தேவை ஒரு நற்செய்தி
பெண் தவறினால் மலடி....
தமிழில் உண்டோ ஆண் தவறினால் என்னவென்று
தாய் மொழியும் ஆணுக்கு அடிமை தான் போலும்.

பல மாதங்கள் தூக்கம் தொலைத்து
உணவு வெறுத்து
பித்தம் தொலைக்க ஊறுகாய் தின்று
நாலிரண்டு மாதங்கள் சுகமான வேதனை

நாளை அம்மாவெனும் உன் மொழியில் எல்லாம் தொலைப்பேன்
சிறுக சிறுக உனக்கு அன்னமிட்டு
என் பசி மறப்பேன்

இன்று அந்த நாள் வந்தது
இரண்டாவது ஜனனம் எனக்கு
ஒரு உயிர் உனக்கு தந்து
விதி இருந்தால் இன்னொன்று
நான் வாங்கி வருவேன்

சொல்ல தெரியவில்லை வேதனை
வயிற்றைக் கிளித்து ஜீவன் போகும் வலி
கடைசியாய் ஒரு முறை உன்னை
உந்தி வெளியில் தள்ளும் போது
கண்கள் இருண்டு சுவாசம் நின்று

காற்றைக் கீறும் உன் அழுகையில்
சுற்றத்தாரின் சிரிப்பொலியில்
தெரிந்து கொண்டேன்
நான் உயிரோடு தானிருக்கிறேன்

மகள் என்று உனை காட்டிய போது
கலங்கிவிட்டேன் ஆனந்தத்திலும் ஆதங்கத்திலும்
உன் அழகைக் கண்டு ஆனந்தமும்

கண்னைப் பார்
வாயைப் பார் அப்படியே அப்பாவை போல‌
என்ற மொழி கேட்டு ஆதங்கமும்
உனைப் பெற்றதில் எனக்கு பங்கில்லையா??

பிறந்த உடனே உனை ஆளத்தொடங்கி விட்டார்களே
என்னை மன்னித்து விடு மகளே
உனையும் ஒரு பெண்ணாக இங்கு தந்ததற்கு....

Tuesday, November 9, 2010

ஒரு கண்ணீர் கடிதம்....

உருகிடுமோ என் காதல் சின்னம்
உனக்காக ஒரு கவிதை 
 எழுத நினைத்து என் பேனாவை 
  துணைக்கழைத்தேன்

ஏற்கனவே களைத்திருந்த அது
 ' அய்யோ ஆரம்பிச்சிட்டியா' என்று சொல்லி
  தப்பிக்க முயன்றது

பல வண்ணங்களில் காகிதத்தை
 பகுத்தெடுத்து வானவில் கட்டி

செந்தமிழ் சொற்களை 
 அடுக்கடுக்காய் அதிலேற்றி

கற்கண்டே கனியமுதே
 மல்லிகையே மரிக்கொழுந்தே
  என உவமைகள் ஊற்றி

உன்னிடம் என் காதலைக் காட்ட‌
 ஒரு கடிதம் உரைக்க நினைத்தேன்

சொற்களில் அடங்காத உன் அழகையும்
 அளவிட்டு சொல்ல இயலா உன் அன்பையும்
  எனை அரவணைத்து நீ நடக்கும் நினைப்பையும்
    சொல்லி சொல்லி திளைத்திட எண்ணி
என் காகிதங்களை நெருங்கினேன்

மழையிலிட்ட வானவில்லாய் போன அது
 வண்ணமெல்லாம் தேய்ந்தும் போனது

உனை எண்ணும் போதெல்லாம்
 ஏனென்று தெரியவில்லை
 
என் கண்கள் எனை கேட்காமல்
 கரைகிறது
கண்ணீரால் என் காகிதம் 
 நனைந்தும் போனது

'வழக்கம் போலவே இன்னிக்குமா 
 அட போப்பா' என வெறுத்துக் கொண்டது
   என் பேனா....