Tuesday, September 23, 2008

மாறிவரும் உலகில்

மாறி வரும் உலகம்...

முதலில் கண் விழித்து பார்த்த முகம் எது?
முதன்முதலாய் யார் மடியில் அசுத்தம் செய்தேன்

அன்று தான் பிறந்ததால்
இதுவரை தெரியாது.

யானை பொம்மை இருந்தாதா இல்லை
குதிரையா.. வேறு ஏதாவது?
அம்மா வாங்கி தந்ததா இல்லை
அப்பாவா...
வயதே தெரியாத காலம்
உறுதியாக சொல்ல தெரியவில்லை.

முதல் காதல் எது?
கைபிடித்து எழுத்து கற்பித்த‌
ஆசிரியையா...
பள்ளிக்கூட மிதிவண்டி தோழி
ராணியா... இல்லை திருமணம் முடிந்து
கணவனோடு செல்லும் போது
என்னைப் பார்த்து கண்ணீர் சிந்திய‌
உறவுப் பெண் புவனா அக்காவா...

பிரித்து அறிய வயதிற்கு தெரியும் என்றாலும்
இதுவரை அறிவிற்கு தெரியவில்லை...

மாறிவரும் உலகம்
எண்ணங்கள் எல்லாம் தொலைந்துவிட்டன...

இசைதட்டு தாலாட்டுக்கு தூக்கம்
அம்மா பாடுவாளா, தெரியாது...
எல்லா உறவாகவும்
ஒரே செவிலி தாய்..

தொலைப்பேசி முத்த சத்தம்
அமெரிக்க பேரனுக்கு பாட்டி
முகம் தெரியாது...
உறவுகள் எல்லாம் ஒலியாய் மட்டுமே
வாழ்வது வேதனை தான்...

கணிப்பொறி விளையாட்டு
அண்டை வீட்டான் பெயர் கூட தெரியாமல்
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு..
இணையத்தில் மட்டுமே
நட்பும் காதலும்...

மாறிவரும் உலகில் நான்
எண்ணங்களை மட்டுமே தொலைத்தேன்..
ஆனால் என்னென்ன தொலைத்திருக்கிறான்
என் பிள்ளை...
நான் பாவமா, இல்லை அவனா....
கேள்வி மட்டுமே இப்போது எழிதாக இருக்கிறது
பதில் சொல்ல வயதிற்கும் தெரியாது..
வாழ்க்கைக்கும் தெரியாது....

Saturday, August 9, 2008

என்று தணியும்

அந்தி சாயும் நேரம்
சூரியனும் சந்திரனும் எதிர் எதிர் திசையில்
இரண்டும் முழுமை இல்லை
வளைந்த நெடும் பாதை
பள்ளம் மேடு இரண்டும்
மனித வாழ்க்கைப் போல...
நாங்களும் மரங்களும் மட்டும்
எங்களைக் கண்டு குளிந்தன போலும்
தென்றலாய் வீசுயது..
என் இடக்கையில் மட்டும்
விர‌ல்க‌ள் ப‌த்து
நீ வார்த்தைக‌ள் பேச‌வில்லை
ஆனால் உன் க‌ண்க‌ளின் கேள்விக‌ளுக்கு
என்னிட‌ம் ப‌தில் இல்லை..
'திரை க‌ட‌ல் ஓடியும் திர‌விய‌ம் தேடு'
சொன்ன‌வ‌ள் பெண் அல்ல‌வா
ஒரு ஆணின் வலி தெரிய‌வில்லை
அவ‌ச‌ர‌ உண‌வு
போதாத தூக்க‌ம் ப‌ர‌வாயில்லை
ஆனால் அறைகுறை ச‌ந்தோச‌ம் கூட‌ இல்லை
'இள‌மையில் க‌ல்'
நானும் க‌ல்லைப் போல‌ தான் இருகிறேன்
குளிரும் ஒன்று தான் வெயிலும் ஒன்று தான்
பாட்டி, நீயும் இதை தான் சொன்னாயோ
அன்பே உனை பிரிந்து உள்ள‌ம் சாக‌
நான் ம‌ட்டும் விரும்பினேனா...
நாளை மீண்டும் ப‌ய‌ண‌ம்
இய‌ந்திர‌ உல‌கிற்கு
இருப்ப‌து இன்னும் ஓர் இர‌வு
இனி என்று உன் க‌ண்க‌ள் காண்பேன்
என்று உன் விர‌ல் தொடுவேன்
க‌ண்க‌ள் குள‌மானது
'ஆம்ப‌ள‌ அழ‌க் கூடாது'
க‌ட்டுப்ப‌டுத்திக் கொண்டேன்
ஏன் ஒரு ஆணுக்கு உண‌ர்ச்சி இல்லையா
அன்பிற்கு அவ‌னும் ஏங்க‌ மாட்டானா
யாராவது இந்த‌ முதுமொழிக‌ளை மாற்றுங்க‌ளேன்
க‌டைசி இர‌வு உண‌வு உன்கையால்
'கொஞ்ச‌ம் விச‌ம் தா உன் ம‌டியிலேயே செத்து விடுகிறேன்
வேண்டாம் என‌க்கு விடிய‌ல்'
ந‌டு இர‌வு
விழித்து ம‌ணி பார்த்தேன்
காதில் விழுந்தது காற்றாடி ஓசையும்
உன் அழுகை ச‌த்த‌மும்
அன்று ம‌ட்டும் ஆத‌வ‌ன் மேல்
ஆகாத‌ கோப‌ம் என் இர‌வை முடித்த‌தால்
'எல்லாத்தையும் எடுத்திட்டியா'
என்ற‌ அப்பாவிட‌ம் எப்ப‌டி சொல்வ‌து
என்னை இங்கே விட்டு செல்கிறேன் என்று...
விமான‌ நிலைய‌ அறிவிப்பு
என் க‌டைசி நொடிக‌ளை விழுங்கிக் கொண்ட‌து
உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்
எனை நீ பார்த்துக் கொள்
பார்வையிலேயே விடை பெற்றேன்
ஒரு விதைக்குள் ம‌ர‌த்தை அடைத்த‌ வித்தைகார‌னே!
பொருள் நாடுவோர் போக‌ட்டும்
புக‌ழ் வேண்டுவோர் ப‌ற‌க்க‌ட்டும்
அந்த‌ அன்பு போதுமென‌க்கு
என்னை என்னோடு சேர்த்துவிடு
இந்த‌ விளையாட்டை சீக்கிர‌ம்
நிறுத்தி விடு

உயிர் கொண்ட‌ பிண‌ம்...

என்ன குற்றம் செய்தேன்
எல்லோருக்கும் ந‌ல்ல‌வ‌னாக‌ இருக்க‌
நினைத்த‌து குற்ற‌மா?
என்னை போதை பொருள் போல்
பார்த்த‌ன‌ ஒரு கூட்ட‌ம்
தேவைப்படும் போது உத‌வி ம‌ட்டும்
பெற்றுக் கொள்ள‌ ஒரு கூட்டம்
வெளுத்ததைப் பால் என்று
எண்ணியது என் குற்றமா...
இல்லை கள்ளையும் பால் போல் படைத்த‌
கடவுள் குற்றமா
ந‌ட்பு ம‌ட்டுமே க‌ள்ள‌ம‌ற்று வேண்டினேன்
க‌ள்ள‌ர்க‌ள் ம‌ட்டுமே ந‌ட்பு பாராட்டின‌ர்
ஏமாற்றும் அவ‌ர்க‌ளைச் சொல்வ‌தா
இல்லை ஏமாறும் என்னை நோவ‌தா
அன்று முத‌ல் இன்று வ‌ரை அன்பு ம‌ட்டுமே நான் வேண்டிய‌து...
அம்மா என்றால் அன்பு
நான் அறிய‌ அதை நான் அதிக‌ம் அனுப‌வித்த‌தில்லை
ராம‌னின் வ‌ன‌ வாச‌ம் ப‌தினான்கு ஆண்டுக‌ள்
என‌க்கு..?
எண்ணி பார்த்தால் அவ‌னை மிஞ்சி விட்டேன்
'ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ருவ‌தில்லை
பிற‌க்கின்ற‌ன‌ர்'
சொன்ன‌வ‌னைக் காட்டிங்க‌ள்
சுட்டு விடுகிறேன், சாக‌ட்டும்...
ஒரு வேளை அவ‌னுக்கு ந‌ல்ல‌
ந‌ண்ப‌ர் கூட்ட‌மோ...
க‌ட‌வுளின் அன்பை தாய் வ‌ழி த‌ந்தான்
தாயின் பாச‌த்தை தோழ‌ன் த‌ருவான்
எங்கேயோ ப‌டித்த‌து
பாவம் எவ‌னோ உல‌க‌ம் தெரியாத‌வ‌ன் எழுதிய‌து
பூக்க‌ளை ம‌ட்டுமே நாம் வாங்க‌ முடியும்
வாச‌ம் அதுவாய் வ‌ந்தால் தான் உண்டு...
நான் போற்றிய‌ உள்ள‌ங்க‌ள் கூட‌
எனை நிந்திக்கும் போது
உடைந்து போகிறேன்..
போதும் இந்த‌ கொடுமை என‌
கோவில் சென்றேன் ஆருத‌ல் தேடி..
இன்னிக்கு ஆடி வெள்ளி
அம்ம‌ன் வீதி உலா போயிருக்கா
கோவிலில் சொன்னார்க‌ள்
அட‌ க‌ட‌வுளே
நீயுமா என்னை ஏமாற்றிச் சென்றாய்...
இனி நான் உயிர் கொண்ட‌ பிண‌ம்...

Thursday, August 7, 2008

ஒரு உணர்வு கிறுக்கல்

புழுதி பறக்கும் செம்மண் சாலை
மழையின் உபயத்தால் நனைந்திருந்தது
மாட்டு வண்டி காளைகள்
பரதத்தின் சங்கதிகள் சொன்னன..
கழுத்துச் சங்கிலியில்
சேற்றில் படாமல் புடவையைக் காப்பாற்ற‌
முழங்கால் கவர்ச்சி காட்டினர்
எங்கள் ஊர் கண்ணகிகள்..
புதுமழையின் மண் வாசத்தில்
சாலையோர அசிங்கங்கள்
ஆனால் இன்று மூச்சை அடக்க தோன்றவில்லை
வெரசா வா நேரமாச்சுரா
அப்பாவின் குரலில் அதட்டல் இல்லை
புதுத் துணி மழையில நனயுதுயா
அம்மாவின் வார்த்தைகள் கூட‌கொஞ்சம் உளறியது
கடிகார முள் நேரத்தை துரத்திக் கொண்டிருந்தாலும் என் கால்கள்
வேகத்தை விரும்பவில்லை
தவழ்ந்து விழுந்த வீட்டு முற்றம்
பிடித்து நடை பழகிய திண்ணை
மணல் வீடு கூட்டாஞ்சோறு
ஆர‌ம்ப‌ ப‌ள்ளி திருவிழா ஊர்வ‌ல‌ம்
வ‌ருட‌ங்க‌ளில் தொலைந்த‌ நினைவுக‌ள்
திரும்ப‌ அசை போட‌ மீத‌மிருக்கும் நிமிட‌ங்க‌ள் போதாது
எல்லை சாமி அய்ய‌னார் கோவில்
அப்பா க‌ற்பூர‌ம் ஏற்ற‌ அம்மா வேண்டிக் கொண்டாள்
அய்ய‌னாரே எங்க‌ இருந்தாலும் எம்புள்ள‌க்கி நீ தான் காவ‌ல்
பேருந்திற்கு காத்திருக்கும் போது
விசாரித்த‌ சித்த‌ப்ப‌னிட‌ம்,பைய‌ன் வெளிநாடு போறான்
வ‌ழிய‌னுப்ப‌ வ‌ந்தோம் என்றார் அப்பா
எங்க‌ள் ஊரில் எல்லோரும்
உற‌வுக்கார‌ர்க‌ள்
வ‌ழ‌க்க‌மாக‌ தாம‌த‌மாக‌ வ‌ரும் பேருந்து வ‌ந்த‌து
ஒரு கால் ப‌டியில் ப‌ட்ட‌ போது
ஒரு பாதி உயிர் உதிர்ந்து விட்ட‌து
தூர‌த்தில் அம்மா புள்ளியாய் ம‌றைந்த‌ போதும்
அவ‌ள் க‌ண்ணீர் ம‌ட்டும் வெள்ள‌மாய் பாய்ந்து துர‌த்திய‌து
விமான‌த்தில் ஏறிய‌ பிற‌கும்
அந்த‌ ஈர‌ம் காய‌வே இல்லை
ம‌ணிக‌ள் க‌ரைந்த‌து
பொம்மைப் பெண் போலியாய் சிரித்து
நான் இற‌ங்க‌ வேண்டிய‌தை உண‌ர்த்தினாள்
அந்த‌ செய‌ற்கை சாத்தான்
இந்த‌ ம‌ண்ணில்என்னை இற‌க்கி விட்ட‌து
வெளியில் இய‌ந்திர‌ம் இய‌க்கும் ம‌னித‌ன்தானும் இய‌ந்திர‌மான‌தை உண‌ர‌வில்லை போலும்
சூரிய‌ன் வ‌ரும் முன் அலுவ‌ல‌க‌ம்
என்னை உள் வாங்கிக் கொள்ளும்
அந்தி சாய்ந்த‌ பின் தான்
அதுவெளியில் த‌ள்ளும்
வார‌ம் ஒரு முறை ம‌ட்டும் விடுப்பு
ஞாயிறு பார்க்க‌ ஞாயிற்றுகிழ‌மையில்...
ஈக்க‌ள் மொய்க்காத‌ உண‌வுக் க‌டையில்
ம‌க்க‌ள் மொய்த்த‌ன‌ர்
வீட்டுல‌ ச‌ம‌ச்சா வீடு அழுக்காயிடும்
ஒரு 'சுத்த‌' த‌மிழ‌ச்சி சொன்னாள்
ஓட்ட‌லு சாப்பாடு ந‌ல்ல‌தில்ல‌
ராசா உட‌ம்புக்குஅம்மாவின் குர‌ல் அச‌ரீரியாய்
முத‌ல் முத‌லாக‌ சொந்த‌ முய‌ற்சியில்
உருவான‌ ர‌ச‌ம்புளிப்பு குறைவு உப்பு அதிக‌ம்
ந‌ண்ப‌ர்க‌ள் சிரித்த‌ போது கோப‌ம் வ‌ந்த‌து
நான் ப‌ல‌ முறை உன் ச‌மைய‌லைப் ப‌ழித்த‌ போதும்
நீ என்னை கோவித்த‌தில்லை
என்னை ம‌ன்னித்து விடு அம்மா
நீ த‌ந்த‌ ர‌த்த‌த்தை ச‌ந்தோச‌த்தை
விற்று ப‌ண‌ம் செய்கிறேன்
உட‌லை ம‌ட்டும் இங்கே விட்டு
உயிரை உன்னைச் சுற்ற‌ விட்டிருக்கிரேன்
உன் புன்ன‌கைக்காக‌ இங்கு பொன்ன‌கை வாங்கினேன்
என்னை விரும்பிய‌ காத‌லைக் கூட எனக்கு வேண்டிய‌ ப‌ண‌த்திற்கு விற்று
ம‌ன‌ங்க‌ளைக் கொன்ற‌ ம‌கான் ஆனேன்
வாழ‌ பொருள் தேடி வ‌ந்தேன்
வ‌ந்து தான் உண‌ர்ந்தேன்
வாழ்க்கையை தொலைத்திருக்கிரேன்
இறைவா
இது நீ த‌ந்த‌ வ‌ர‌மா
இல்லை ஊள் வினை சாப‌மா
இந்த‌ உடல், உயிர் சென்று சேருமா
காத‌லின் க‌ண்ணீரும் காயுமா
கொண்ட‌ க‌ட‌மையும் தீருமா
உன்னால் ப‌தில் சொல்லக் கூடுமா
ப‌டைத்த‌ உன்னையேநான் ப‌ழித்து கேள்வி கேட்ப‌து பாவ‌மா....

தமிழ் பேசுவோம்; வளர்ப்போம்

உயிர் விட்டு வளர்த்தனர் தமிழை பலர். நாம் நம் மொழி பேச மறந்து வேற்று மொழி மோகம் கலத்து, தமிழ் மறந்து போகிறோம்....
இணையம் இன்று எளிய எல்லோர் கைப் படும் வழி...
இதிலும் நாம் முனைவோம் தமிழ் செய்ய...
உங்கள் திறமைகளைத் தெளியுங்கள்....
பகிர்ந்து கொள்வோம்