அந்தி சாயும் நேரம்
சூரியனும் சந்திரனும் எதிர் எதிர் திசையில்
இரண்டும் முழுமை இல்லை
வளைந்த நெடும் பாதை
பள்ளம் மேடு இரண்டும்
மனித வாழ்க்கைப் போல...
நாங்களும் மரங்களும் மட்டும்
எங்களைக் கண்டு குளிந்தன போலும்
தென்றலாய் வீசுயது..
என் இடக்கையில் மட்டும்
விரல்கள் பத்து
நீ வார்த்தைகள் பேசவில்லை
ஆனால் உன் கண்களின் கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை..
'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு'
சொன்னவள் பெண் அல்லவா
ஒரு ஆணின் வலி தெரியவில்லை
அவசர உணவு
போதாத தூக்கம் பரவாயில்லை
ஆனால் அறைகுறை சந்தோசம் கூட இல்லை
'இளமையில் கல்'
நானும் கல்லைப் போல தான் இருகிறேன்
குளிரும் ஒன்று தான் வெயிலும் ஒன்று தான்
பாட்டி, நீயும் இதை தான் சொன்னாயோ
அன்பே உனை பிரிந்து உள்ளம் சாக
நான் மட்டும் விரும்பினேனா...
நாளை மீண்டும் பயணம்
இயந்திர உலகிற்கு
இருப்பது இன்னும் ஓர் இரவு
இனி என்று உன் கண்கள் காண்பேன்
என்று உன் விரல் தொடுவேன்
கண்கள் குளமானது
'ஆம்பள அழக் கூடாது'
கட்டுப்படுத்திக் கொண்டேன்
ஏன் ஒரு ஆணுக்கு உணர்ச்சி இல்லையா
அன்பிற்கு அவனும் ஏங்க மாட்டானா
யாராவது இந்த முதுமொழிகளை மாற்றுங்களேன்
கடைசி இரவு உணவு உன்கையால்
'கொஞ்சம் விசம் தா உன் மடியிலேயே செத்து விடுகிறேன்
வேண்டாம் எனக்கு விடியல்'
நடு இரவு
விழித்து மணி பார்த்தேன்
காதில் விழுந்தது காற்றாடி ஓசையும்
உன் அழுகை சத்தமும்
அன்று மட்டும் ஆதவன் மேல்
ஆகாத கோபம் என் இரவை முடித்ததால்
'எல்லாத்தையும் எடுத்திட்டியா'
என்ற அப்பாவிடம் எப்படி சொல்வது
என்னை இங்கே விட்டு செல்கிறேன் என்று...
விமான நிலைய அறிவிப்பு
என் கடைசி நொடிகளை விழுங்கிக் கொண்டது
உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்
எனை நீ பார்த்துக் கொள்
பார்வையிலேயே விடை பெற்றேன்
ஒரு விதைக்குள் மரத்தை அடைத்த வித்தைகாரனே!
பொருள் நாடுவோர் போகட்டும்
புகழ் வேண்டுவோர் பறக்கட்டும்
அந்த அன்பு போதுமெனக்கு
என்னை என்னோடு சேர்த்துவிடு
இந்த விளையாட்டை சீக்கிரம்
நிறுத்தி விடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment