Friday, December 17, 2010

பிரிகின்ற காதலுக்கு கடைசியாய் ஒரு கடிதம்

இல்லாத ஒன்றுக்கு இலவு காத்து
இருக்கின்ற ஒன்றை இருட்டில் தள்ளி
மானம் போற்ற ஈனம் தழுவி
சரியென்ன தவறென்ன புரியாமல்

தீயள்ளி தின்கிறேன்
கூடாதென தெரிந்தும் செய்கிறேன்

கண்ணீரில் பேதமென்ன‌
உனதென்றும் பிரிதென்றும்

மனக்கொலைக்கு துணிகின்றேன்
மீளாத பாதைக்கு விரைகிறேன்

வேண்டாத வரமொன்று வேண்டிப் பெற்றேன்
வேண்டிமென தெரிந்தும் வீசி எறிகிறேன்

இனிக் காதல் இல்லை வாழ்தலுமில்லை
சாதல் சாதல் சாதலே அன்றி வேறில்லை....

Wednesday, November 10, 2010

இரு ஜனனம்.....

புதிதாய் ஒரு பயணம்...
சில நாட்கள் மட்டுமே அறிமுகம்
காலையில் திருமண சடங்கு
இரவே உயிர் வாங்கும் வன்முறை

எல்லோரும் இளைப்பாறும் சுமைதாங்கியாய்
மட்டுமே பெண்கள்
பாரம் குறையும் வரை ஆராதனை.

ஓரிரு மாதங்களில் தேவை ஒரு நற்செய்தி
பெண் தவறினால் மலடி....
தமிழில் உண்டோ ஆண் தவறினால் என்னவென்று
தாய் மொழியும் ஆணுக்கு அடிமை தான் போலும்.

பல மாதங்கள் தூக்கம் தொலைத்து
உணவு வெறுத்து
பித்தம் தொலைக்க ஊறுகாய் தின்று
நாலிரண்டு மாதங்கள் சுகமான வேதனை

நாளை அம்மாவெனும் உன் மொழியில் எல்லாம் தொலைப்பேன்
சிறுக சிறுக உனக்கு அன்னமிட்டு
என் பசி மறப்பேன்

இன்று அந்த நாள் வந்தது
இரண்டாவது ஜனனம் எனக்கு
ஒரு உயிர் உனக்கு தந்து
விதி இருந்தால் இன்னொன்று
நான் வாங்கி வருவேன்

சொல்ல தெரியவில்லை வேதனை
வயிற்றைக் கிளித்து ஜீவன் போகும் வலி
கடைசியாய் ஒரு முறை உன்னை
உந்தி வெளியில் தள்ளும் போது
கண்கள் இருண்டு சுவாசம் நின்று

காற்றைக் கீறும் உன் அழுகையில்
சுற்றத்தாரின் சிரிப்பொலியில்
தெரிந்து கொண்டேன்
நான் உயிரோடு தானிருக்கிறேன்

மகள் என்று உனை காட்டிய போது
கலங்கிவிட்டேன் ஆனந்தத்திலும் ஆதங்கத்திலும்
உன் அழகைக் கண்டு ஆனந்தமும்

கண்னைப் பார்
வாயைப் பார் அப்படியே அப்பாவை போல‌
என்ற மொழி கேட்டு ஆதங்கமும்
உனைப் பெற்றதில் எனக்கு பங்கில்லையா??

பிறந்த உடனே உனை ஆளத்தொடங்கி விட்டார்களே
என்னை மன்னித்து விடு மகளே
உனையும் ஒரு பெண்ணாக இங்கு தந்ததற்கு....

Tuesday, November 9, 2010

ஒரு கண்ணீர் கடிதம்....

உருகிடுமோ என் காதல் சின்னம்
உனக்காக ஒரு கவிதை 
 எழுத நினைத்து என் பேனாவை 
  துணைக்கழைத்தேன்

ஏற்கனவே களைத்திருந்த அது
 ' அய்யோ ஆரம்பிச்சிட்டியா' என்று சொல்லி
  தப்பிக்க முயன்றது

பல வண்ணங்களில் காகிதத்தை
 பகுத்தெடுத்து வானவில் கட்டி

செந்தமிழ் சொற்களை 
 அடுக்கடுக்காய் அதிலேற்றி

கற்கண்டே கனியமுதே
 மல்லிகையே மரிக்கொழுந்தே
  என உவமைகள் ஊற்றி

உன்னிடம் என் காதலைக் காட்ட‌
 ஒரு கடிதம் உரைக்க நினைத்தேன்

சொற்களில் அடங்காத உன் அழகையும்
 அளவிட்டு சொல்ல இயலா உன் அன்பையும்
  எனை அரவணைத்து நீ நடக்கும் நினைப்பையும்
    சொல்லி சொல்லி திளைத்திட எண்ணி
என் காகிதங்களை நெருங்கினேன்

மழையிலிட்ட வானவில்லாய் போன அது
 வண்ணமெல்லாம் தேய்ந்தும் போனது

உனை எண்ணும் போதெல்லாம்
 ஏனென்று தெரியவில்லை
 
என் கண்கள் எனை கேட்காமல்
 கரைகிறது
கண்ணீரால் என் காகிதம் 
 நனைந்தும் போனது

'வழக்கம் போலவே இன்னிக்குமா 
 அட போப்பா' என வெறுத்துக் கொண்டது
   என் பேனா....

Tuesday, April 14, 2009

நான் கடவுள்....

சுயத்தை விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு விளக்கும் கட்டாயம் இன்று கொண்டேன். பலர் கூறிச்சென்றது போலவே நானும் வாழ்க்கை கடல் என்றும் நீங்கள் எல்லோரும் பயணிகள் என்று தான் கூறப்போகிறேன், என் வேலை அதில் என்ன என்று விளக்கி.

நீங்கள் எல்லோரும் தனித் தனியே பயணிக்கவே இயலும்; அதனால் தான் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சக்தியாய் நிறைந்தேன். வாழ்வை பாதுகாப்புடன் கடக்கும் ஒரு ஓடமாய் இருக்கிறேன் உங்கள் எல்லோருக்கும்.

நான் ஒரு ஓடம் மட்டுமே. செலுத்துபவர்கள் நீங்களே. பாதையை தேர்வு செய்வதும் நீங்களே. செல்லும் வழிகள் இடர்கள் வரும் போது நீங்கள் மூழ்கிடாமல் மட்டுமே உங்களை நான் காக்கிறேன். என் துணையோடு தான் செல்கிறோம் என்று மனதில் துணிவோடு நேர் வழி செல்பவன் வாழ்வைக் கடக்கிறான். நானும் அவனுக்கு துணை போகிறேன் என்று தவறாக நினைத்து கூடாத பாதைகளைத் தேர்வு செய்தவன் வழி தவறி எங்காவது மாட்டிக் கொள்வான். அப்போதும் கூட கவிழ்ந்த ஓடமாகவாவது நான் அவனை காப்பாற்ற துணை இருப்பேன். அந்த நிலையிலும் திறமையும் தன் தவறை புரிந்தவனும் சிரமங்களில் இருந்து விடை பெறுகிறான். அதனால் நான் நல்லவன் தீயவன் என்று வேற்றுமை பாராத ஒரு நண்பன் மட்டுமே.

ஓடமாக மட்டுமே நான் இருக்கிறேன்; ஓடத்தை செலுத்தும் சக்தியையும் உன் மனதில் வலிமையையும் நான் உனக்கு பரிசுகளாய் தருகிறேன். அவற்றை ஒழுங்கு படுத்தி பயன்படுத்தக் கற்றவன் வெல்கிறான்; கடலைக் கடந்த பின்னும் புகழோடு வாழ்கிறான். இனியும் உனக்கு விளக்கம் போதவில்லை என்றால் அது என் தவறு தான்; நான் தான் உனக்கு கேள்விகள் அதிகம் கேட்கும் பரிசை தந்துவிட்டேன் போலும்....

Sunday, March 22, 2009

காய்ந்தப் பூக்கள்...

விட்டு கொடுப்பதில் உண்டு வாழ்க்கை
விட்டு பிடிப்பதில் இல்லை
விட்டால் பிடிப்பதும் இயலாத காரியம்.....

அடக்கி ஆள்வதும் ஆள நினைப்பதும்
மிக முட்டாள் தனம்...

காதல் பேசும் போது கனிரசமே என்ற உன் உதடுகள்
கட்டில் மேல் கவி எழுதிய உன் வார்த்தைகள்
இன்று மட்டும் வேசியே! என்று ஏசியதென்னவோ.....

நம் காதல் கடவுள் முடிச்சு என்றாயே
இன்று கடவுள் என் பக்கம், உன்னை வெல்வேன் என்கிறாயே
விடை சொல் இதற்கு
உன் இருகைகளில் வலக்கை தோற்று இடக்கை வெல்கிறதா?

கண் என்றும் மணியென்றும் போற்றினாயே
இன்று மண் என்று தூற்றுவது சரியாமோ...
வாழ்வு செழிக்கவே வழி தேடச் சொன்னேன்
அது முயற்சியால் மட்டுமே கிட்டும் என்று அறிவுறுத்தினேன்....

அதற்கும் என் மேல் பழி உரைத்தாய்
என் வார்த்தைகளுக்கு மறுப்பு வேண்டாம் என்பதில்லை...
ஆனால் நல்ல கருத்துக்கு தேவையா வெறுப்பு...

நீ விட்டு சென்ற கால் தடம் பற்றி நான் செல்ல நினைத்தேன்
நம் லட்சியம் வெல்ல விரைந்திட வேண்டுமே
காதல் ஒரு கட்டம் தான்
அதற்கும் மேலே, வாழ்வு!!!!
தேவைகள் பல பிறக்கும்
எதிர்பார்ப்புகள் தோன்றுமே
அதை தான் நான் உணர்த்துகிறேன்

ஆனால் இனி அது இல்லை
உதிர்ந்த மலராவது உபயோகப்படும்
காய்ந்த மலரானது நம் காதல்
இனி அது பயனளிக்குமா மீண்டும்?

இறையே, நீயே பதில் சொல்....

Wednesday, March 18, 2009

வழியெங்கும் விசம்....

இது என் பாதை...

கல்லிருக்கும் முள்ளிருக்கும் என்ற
இலக்கிய விதிகள் இல்லை

அழகான நீரோடை குளிர்ந்த சோலைகள்
காதருகில் கவி பாடும் தேனீகள் கூட்டம்

தலைமுடியை வருடி செல்லும் தென்றல்
நாசியை நனைக்கும் ஒரு மெல்லிய நறுமணம்
பூக்கள் மேல் வண்டுகளின் முத்த சத்தம்

காது கூச வெட்கம் கொன்றிடும் யாரையும்..
மாதுளைகளையும் மாம்பழங்களையும்
வாசத்தை மட்டும் எனக்கு தந்து விட்டு
வாய் சுவையை அணில்கள் களவாடிச் சென்றது.

புயல் வீசப் பொறாத என் பூங்கா பாதை
கால் சென்ற வழியில் இரு வழி கொண்டது.

கண் கொள்ளும் தூரம் மட்டும் வண்ணத்துப் பூச்சிகள்
ஒரு பாதையில் என்னை வரவேற்க,

காலை நேர இளந்திரையின் வெளிச்சக் கீற்றுகளில்
இன்னொரு பாதயில் மயில்களும் மான்களும்......

ஒரு புறம் குயில் பாடும் கீதம்
மறுபுறம் பிள்ளை மொழியில் எனை அழைத்த கிளிகள்.

இந்தப் பக்கம் கடற்கரைகளின் காற்று சத்தம்
உப்புக்காற்றில் கரையோர பூக்களின் வாசம்
ஈர மண்ணில் கால்பதிக்கும் போதே
இருக்கும் சோகம் எல்லாம் கழுவிவிடும் கடலலை

அந்தப் பக்கம் ஆறாத அருவிகளின் அடங்காத ஓசை
கரை அருகில் நின்றாலே கவி ஆறு ஓடும் எவனுக்குள்ளும்
நீண்டு தொங்கும் நீர் மாலை அது
யாருக்கு தான் ஆசை இருக்காது அணிந்து கொள்ள.

இப்புறம் சென்றால் அப்புறம் வீணாமோ!
மாறிச் சென்றால் பாவமோ?

நெடுங்குழப்பம்; கடவுள் சித்தம்
வந்த வழி செல்ல எண்ணி கால்கள் திரும்பி கண் பார்க்கையில்
பூக்கள் விட்டு பூக்கள் செல்லும் தேனீக்களையும்
அழகான பூக்களோடு ஆளைக் கொல்லும் அரளியையும்
ஓடை அருகில் தவளைகளுக்காக தவம் செய்யும்
பாம்புகளையுமே கண்டது...

தீண்டிய தென்றல் ஒன்று புயலாய்
என் உயிர் தின்ன நின்றது....
வந்த வழி எங்கும் விசம்.
அதனால் இந்த இரண்டில் ஒன்று தான்
என் பாதை..

எவ்வழி போனாலும் அது எனக்கு விசமே
இன்னோரு பாதை என்னை சபிக்குமே
இறைவா இதுவும் உன் விளையாட்டா?

Tuesday, September 23, 2008

மாறிவரும் உலகில்

மாறி வரும் உலகம்...

முதலில் கண் விழித்து பார்த்த முகம் எது?
முதன்முதலாய் யார் மடியில் அசுத்தம் செய்தேன்

அன்று தான் பிறந்ததால்
இதுவரை தெரியாது.

யானை பொம்மை இருந்தாதா இல்லை
குதிரையா.. வேறு ஏதாவது?
அம்மா வாங்கி தந்ததா இல்லை
அப்பாவா...
வயதே தெரியாத காலம்
உறுதியாக சொல்ல தெரியவில்லை.

முதல் காதல் எது?
கைபிடித்து எழுத்து கற்பித்த‌
ஆசிரியையா...
பள்ளிக்கூட மிதிவண்டி தோழி
ராணியா... இல்லை திருமணம் முடிந்து
கணவனோடு செல்லும் போது
என்னைப் பார்த்து கண்ணீர் சிந்திய‌
உறவுப் பெண் புவனா அக்காவா...

பிரித்து அறிய வயதிற்கு தெரியும் என்றாலும்
இதுவரை அறிவிற்கு தெரியவில்லை...

மாறிவரும் உலகம்
எண்ணங்கள் எல்லாம் தொலைந்துவிட்டன...

இசைதட்டு தாலாட்டுக்கு தூக்கம்
அம்மா பாடுவாளா, தெரியாது...
எல்லா உறவாகவும்
ஒரே செவிலி தாய்..

தொலைப்பேசி முத்த சத்தம்
அமெரிக்க பேரனுக்கு பாட்டி
முகம் தெரியாது...
உறவுகள் எல்லாம் ஒலியாய் மட்டுமே
வாழ்வது வேதனை தான்...

கணிப்பொறி விளையாட்டு
அண்டை வீட்டான் பெயர் கூட தெரியாமல்
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு..
இணையத்தில் மட்டுமே
நட்பும் காதலும்...

மாறிவரும் உலகில் நான்
எண்ணங்களை மட்டுமே தொலைத்தேன்..
ஆனால் என்னென்ன தொலைத்திருக்கிறான்
என் பிள்ளை...
நான் பாவமா, இல்லை அவனா....
கேள்வி மட்டுமே இப்போது எழிதாக இருக்கிறது
பதில் சொல்ல வயதிற்கும் தெரியாது..
வாழ்க்கைக்கும் தெரியாது....